

சென்னை
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் தவிர அந்த மாவட் டங்களில் உள்ள மற்ற சட்டப் பேரவை தொகுதிகளிலும் பறக் கும்படை, நிலை கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்.21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த இரு தொகுதிகளும் சார்ந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:
விக்கிரவாண்டி தொகுதியில் 139 வாக்குச்சாவடி மையங்களில், 275 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாங்குநேரியில் 170 மையங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைந் துள்ளன.
விக்கிரவாண்டியில் 1 லட்சத்து 11,721 ஆண் மற்றும் 1 லட்சத்து 11,710 பெண், மூன்றாம் பாலினத் தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 23,456 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் நாங்குநேரியில் 1 லட்சத்து 27,341 ஆண் மற்றும் 1 லட்சத்து 29,698 பெண், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என 2 லட்சத்து 57,042 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று முதல் 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் நடக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர அந்த தொகுதி சார்ந்த மாவட்டத்தில் உள்ள இதர சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒரு பறக்கும்படை, ஒரு நிலை கண்காணிப்புக் குழு உருவாக்கப்படும். தற்போது அந்த தொகுதி சார்ந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமலில் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அவ்வப்போது தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கு தேவை யான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீபாவளியை ஒட்டி தேர்தல் நடத் தப்படும் நிலையில், விதிகளுக்கு உட்பட்டு பணம், பொருட்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.