சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை பரப்பிய சிலம்பொலி செல்லப்பனின் 92-வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்: சென்னையில் செப்.26-ல் விழாவுக்கு ஏற்பாடு

சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை பரப்பிய சிலம்பொலி செல்லப்பனின் 92-வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்: சென்னையில் செப்.26-ல் விழாவுக்கு ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை

சிலப்பதிகாரத்தின் சிறப்பை பட்டிதொட்டி எங்கும் பரப்பிய மறைந்த சிலம்பொலி சு.செல்லப்பனின் 92-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 26-ம் தேதி சென்னையில் விழா நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையம் என்ற கிராமத்தில் 1928-ம் ஆண்டு செப்.24-ம் தேதி சிலம்பொலி செல்லப்பன் பிறந்தார். 1950-ம் ஆண்டு நாமக்கல்லில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர், தலைமைஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பதிவாளர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பதவிகளையும் வகித்துள்ளார்.

56 இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இவர் உருவாக்கிய செம்மொழி தமிழ் அகப்பொருள் களஞ்சியம், 14 தொகுதிகளாக 6 ஆயிரம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதியுள்ளார். 60-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் பேரன்பைப் பெற்றவராக இருந்தார். உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான இடங்களில் இலக்கிய சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, ‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்க்க சிலப்பதிகார அறக்கட்டளையை கடந்த 2004-ம் ஆண்டு நிறுவினார். ஆண்டுதோறும் சிலப்பதிகார மாநாடுகளை நடத்தி வந்தார். அதில் சிலப்பதிகார காப்பியத்துக்கு அளப்பரிய தொண்டு புரிந்த ஒருவருக்கு ‘இளங்கோ விருது’ மற்றும் ரூ.1லட்சம் நிதியை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சென்னையில் காலமானார். சிலம்பொலி செல்லப்பனின் 92-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது மறைவுக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.

இதற்கிடையே, சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை, அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் சார்பில் சிலம்பொலி செல்லப்பனின் பிறந்த நாள், சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ராணி சீதை அரங்கில் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ் விழாவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகிக்கிறார். விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்று பல்வேறு விருதுகளை வழங்குகிறார். மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்த சிலம்பொலி செல்லப்பனின் ‘காப்பிய கம்பரும் புரட்சிக் கவிஞரும்’ என்ற நூலை ஈரோடு தமிழன்பன் வெளியிட, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக்கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in