Published : 23 Sep 2019 09:22 PM
Last Updated : 23 Sep 2019 09:22 PM

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னை

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 2 குழந்தைகள் உயிரிழந்தது.

சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். சவிதா தம்பதி. இவர்களது 6 வயது மகள் மகாலட்சுமி. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மகாலட்சுமி சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி மகாலட்சுமி நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமிக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று மாலை திடீரென்று சிறுமி உயிரிழந்தார்.

சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.

இதேபோல் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 8 மாத குழந்தை லோகித். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பிறவிக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது.

குழந்தையை பரிசோதனை செய்ததில், குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று குழந்தை உயிரிழந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில தினங்களாக டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் மழை நீர், நல்ல நீரில் வளரும் கொசுக்களால் வரக்கூடிய காய்ச்சல் ஆகும். மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வீட்டின் , பள்ளிக்கூடத்தின் அருகில், மொட்டைமாடியில் மைதானங்களில் உள்ள தேவையற்ற நீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தவும் அல்லது குப்புற கவிழ்த்து வைக்கவும்.

டயர்கள், தேங்காய் மட்டைகள், கொட்டாங்குச்சிகள், பாட்டில்கள் ஏதேனும் இருந்தால் அகற்றிவிடவும் என மருத்துவவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x