

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி கல்லூரியிலும் சேர்ந்து பின்னர் சிக்கி தலைமறைவாகியுள்ள மாணவர் உதித்சூர்யா வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். இவரது மகன் உதித்சூர்யா (21). தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
உதித்சூர்யா படிப்பை தொடர்ந்த நிலையில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தகவல் வந்தது. இதுகுறித்த தகவல் போலீஸாருக்கும் கிடைத்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில், உதித்சூர்யா ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது உறுதியானது.
இந்த புகார் எழுந்தவுடன் உதித்சூர்யா மன உளைச்சலாக இருக்கிறது என கல்லூரியிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறினார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் டாக்டர் வெங்கடேசன், மாணவர் உதித்சூர்யாவை விசாரிக்க தனிப்படை போலீஸார் சென்னைக்கு சென்றபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.
அவர்களை போலீஸார் தேடி வந்தனர். மறுபுறம் அவரது உறவினர்கள், நண்பர்கள், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மோசடி குறித்து விசாரித்த பேராசிரியர் குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.