Published : 23 Sep 2019 06:47 PM
Last Updated : 23 Sep 2019 06:47 PM

போலீஸ் வாகனச் சோதனையில் இளம்பெண் கால்கள் மீது லாரி ஏறி நசுங்கிய விவகாரம்: திருவள்ளூர் எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை

திருவள்ளூரில் போலீஸாரின் ஹெல்மெட் சோதனையால், கீழே விழுந்த இளம்பெண்ணின் கால்கள் மீது லாரி ஏறி நசுங்கிய விவகாரத்தில் திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (23). இவருக்குச் சமீபத்தில் திருமணமானது. கடந்த 21-ம் தேதி தனது தாயாருக்குப் பிறந்த நாள் என்பதற்காக கேக் வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றர். அங்கு ஹெல்மெட் வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹெல்மெட் அணியாத பிரியதர்ஷினியைப் பிடிக்க முயன்றனர். இதில் திடீரென பிரேக் அடித்ததால் நிலை தடுமாறிய பிரியதர்ஷினி மீது கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இதில் கீழே விழுந்த அவர் கால்கள் மீது லாரியின் சக்கரங்கள் ஏறின. இதனால் பிரியதர்ஷினியின் இரண்டு கால்களும் நசுங்கிய நிலையில் பலத்த காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈட்பட்டனர். போலீஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றை எரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் தொடர்பாக 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு உத்தரவிட்டார். இந்த அறிக்கையை மூன்று வாரத்திற்குள் அனுப்ப வேண்டும். தவறினால் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x