

சென்னை
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.23) வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பருவமழை காலத்தில் மழை அதிகமாகப் பெய்தால் சாலைகளில் ஏற்படும் பழுதுகளைச் சரிபார்ப்பது, மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தற்காலிக மருத்துவ முகாம்களை அமைப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், இதுவரை 4,399 இடங்கள் மழையால் பாதிக்கப்படக் கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இக்கூட்டத்தில் மீட்புப் பணிகள், நிவாரண முகாம்கள், தாழ்வான பகுதிகள், புயல் உருவானால் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறை, கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கும் நடவடிக்கையை வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.