நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
Updated on
1 min read

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று (செப்.23) தொடங்கியது. அரசு விடுமுறை தினமான வருகிற 28, 29-ம் தேதி தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நாங்குநேரி வட்டாட்சியர் ரஹமத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இவர்கள் வேட்புமனுக்களை பெறுகின்றனர். 200 வேட்புமனுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெவிதித்தனர்.

வருகிற 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில், முதல் நாளான இன்று யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. பிரதான கட்சிகளான அதிமுக, காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குநேரியில் போட்டியிட அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் விருப்பமனு கொடுத்துள்ளார்.

அவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

ஆட்சியர் ஆய்வு:

இதற்கிடையே நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.

அப்போது அவர், "நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் மற்றும் நிலையான கண்கானிப்புக் குழுவினர் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் தவிர அவருடன் 4 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் அனைத்து தேர்தல் பணிகளும் முறையாக நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதியில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்கு சாவடிகளில் ஆய்வு செய்தார். நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மறுகால்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், வட்டாட்சியர் திருப்பதி, துணை வட்டாட்சியர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

-த.அசோக்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in