Published : 23 Sep 2019 04:14 PM
Last Updated : 23 Sep 2019 04:14 PM

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டும்: கள்ளக்குறிச்சி எம்.பி. விருப்ப மனு தாக்கல்

சென்னை

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி போட்டியிட வேண்டும் என்று கவுதம சிகாமணி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்த குமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 30-ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 3-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் விக்கிர வாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புவோர் இன்று மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் நாளை (செப். 24) காலை 10 மணிக்கு வேட்புமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இளைஞரணிச் செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி போட்டியிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட மாவட்ட நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நான், உதயநிதி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன்.

இந்தத் தொகுதியில் நூறு சதவீதம் எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உதயநிதி போட்டியிட்டால் தமிழகம் முழுக்க அடையாளம் காணப்பட்ட நட்சத்திரத் தொகுதியாக விக்கிரவாண்டி இருக்கும்'' என்று கவுதம சிகாமணி தெரிவித்தார்.

தொண்டர்களும் மாவட்ட நிர்வாகிகளும் தங்கள் தலைவர்கள் போட்டியிட வேண்டும் என்று தேர்தலில் மனு தாக்கல் செய்வது இயல்பு. ஆனால் ஓர் எம்.பி.யே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால், விக்கிரவாண்டியில் உதயநிதி களமிறங்குகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x