Published : 23 Sep 2019 03:20 PM
Last Updated : 23 Sep 2019 03:20 PM

வரத்து குறைந்ததால் பெரிய வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: திண்டுக்கல் மொத்த சந்தையில் கிலோ ரூ.50-ஐ கடந்து விற்பனை 

திண்டுக்கல்

வடமாநிலங்களில் மழையின் தாக்கம் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையையும் கடந்து பெரிய வெங்காயம் விலை உயர்வு பெற்று திண்டுக்கல் மொத்தச் சந்தையில் ஒரு கிலோ ரூ.50 யை கடந்து விற்பனையாகிறது. இந்த நிலை மேலும் மூன்று மாதங்கள் தொடரும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தின் பெரிய வெங்காய மார்கெட்..

தமிழகத்தில் உள்ள பெரிய வெங்காய மார்க்கெட்டுகளில் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டும் ஒன்று. திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் செயல்படுகிறது. திண்டுக்கல், தேனி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு மொத்த விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

மகாராஷ்டிராவில் இருந்து பெரியவெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

மார்க்கெட் செயல்படும் 3 நாட்களில் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரியவெங்காயம் வந்திறங்கும். தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியவெங்காயம் பட்டறைகளில் இருப்பு வைக்க முடியவில்லை. பயிரிடப்பட்ட பெரியவெங்காயமும் மழையால் சேதத்திற்குள்ளாகிவிட்டன.

இதனால் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயங்கள் அனைத்தும் தற்போது விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

வழக்கமாக ஒரு நாளைக்கு (திங்கள், புதன், வெள்ளி தினங்களில்) 25 லாரிகள் பெரிய வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வந்து இறங்கியது. தற்போது 15 லாரிகளாக குறைந்துவிட்டது. ஆனால் தேவை எப்போதும்போல் குறையாமல் உள்ள நிலையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.30 க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.50 க்கு மொத்த மார்க்கெட்டில் விற்பனையாகிறது. இதை வாங்கிச்செல்லும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60-க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

பெரிய வெங்காயம் விலை கடந்த ஒருவாரத்தில் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை பெரிய வெங்காயம் இதுபோன்ற விலை ஏற்றத்தை கண்டதில்லை என்கின்றனர் வியாபாரிகள்.

விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன?

இதுகுறித்து திண்டுக்கல் ஏற்றுமதியாளர்கள் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்க பொருளாளர் எம்.வி.மாரிமுத்து கூறியதாவது:

வடமாநிலங்களில் பெய்த பலத்த மழையால் இருப்பு வெங்காயமும், பயிரிடப்பட்டுள்ள வெங்காயங்களும் சேதமடைந்தது தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.

தேவை இருப்பதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை வடமாநில விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு முழுமையாக அனுப்பிவைக்கின்றனர்.

இருந்தபோதும் ஒரு நாளைக்கு 25 லாரிகள் வந்திறங்கிய மார்க்கெட்டில் தற்போது 15 லாரிகளில் மட்டுமே பெரியவெங்காயம் வந்திறங்குவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் ஏற்றமடைந்துள்ளது.

நடப்பட்ட வெங்காயமும் மழையால் சேதமடைந்ததால் மீண்டும் பெரிய வெங்காயம் நடவு செய்து அறுவடை செய்ய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், தற்போதுள்ள இருப்பு தீரும் பட்சத்தில் வரத்து படிப்படியாக குறைந்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சின்னவெங்காயத்தை விட பெரியவெங்காயம் எப்பொழுதும் அதிக விலைக்கு விற்றதில்லை. தற்போது சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கும் நிலையில் பெரியவெங்காயம் இதை கடந்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.
மூன்று மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தின் விலை இறங்கவாய்ப்பில்லை, மேலும் உயரவேண்டுமானால் வாய்ப்புண்டு, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x