

சென்னை
மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (செப்.23) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மழை பொழியும் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தற்போதைய சாதாரண மழைக்கே தலைநகர் சென்னை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் மழைநீர் வடிவதில் இன்னமும் சிக்கல் உள்ளது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் கொசு உற்பத்தி அதிகமாகி மக்களை அவதிக்குள்ளாக்குகிறது.
'சிறு மழைக்கே இந்த நிலைமை என்றால், வரப்போகிற மழைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்' என்ற கவலை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இப்போதாவது மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உண்மையான முனைப்போடு அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மழையால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் அவசியம்.
ஆறுகளில் தண்ணிர் வந்த பிறகு தூர்வாரும் பணியைச் செய்து மக்களை ஏமாற்றுவது போல் இதிலும் அலட்சியமாக செயல்படக் கூடாது. மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் ஒரு சிறப்புக் குழுவையும், மாவட்டம் தோறும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் உள்ளடக்கிய சிறப்புக் குழுக்களையும் உடனடியாக அமைத்திட வேண்டும்," என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.