Published : 23 Sep 2019 01:11 PM
Last Updated : 23 Sep 2019 01:11 PM

சேலம் அரசு விழாவில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: ஸ்டாலின் கண்டனம் 

சென்னை

சேலத்தில் நடந்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்கும் விழாவில் ஓய்வுபெற்ற ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் தொழிலாளர்களைக் காத்திருக்க வைத்த போக்கால் ஒரு உயிர் போனது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன் வழங்கும் விழா சேலத்தில் நடந்தது. ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்காக காலை 8 மணிக்கே அனைவரையும் வரவழைத்து அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தருமபுரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் மணியும் ஒருவர்.

அவர் நிகழ்ச்சி நடக்கும்போதே திடீரென தொண்டை எரிகிறது என மயங்கி விழ, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசைக் கண்டித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுநர் மணி இறந்திருப்பது வேதனைக்குரியது. இறந்தவரின் குடும்பத்திற்கு, ஆட்சியாளர்கள் உரிய இழப்பீடும், நியாயமும் வழங்கிட வேண்டும். அமைச்சர்கள் சுயவிளம்பரத்திற்கான இத்தகைய போக்குகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x