Published : 23 Sep 2019 12:43 PM
Last Updated : 23 Sep 2019 12:43 PM

'சுபஸ்ரீ உயிரிழந்தது விதியால்; இது யதார்த்தமாக நடந்த விபத்து'- பிரேமலதா பேச்சால் சர்ச்சை

சென்னை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது யதார்த்தமாக நடந்த விபத்து என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, சென்னை குரோம்பேட்டையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது, அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்படிருந்த பேனர் விழுந்தது. இதில் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீயின் மரணம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சித் தலைவர்கள் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது என்று தங்கள் தொண்டர்களிடம் உத்தரவு பிறப்பித்தனர். சமூக வலைதளங்களில் #whokilledsubhasree #justiceforsubhasree உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

இதற்கிடையே சென்னையை அடுத்த ஆவடியில் தேமுதிக பொதுக்கூட்டம் நேற்று (செப். 22) நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''சுபஸ்ரீ மரணம் யதார்த்தமாக நடந்த ஒரு விஷயம்தான். ஏனெனில் இன்று பேனர் வைக்காதவர்களே கிடையாது.

எல்லோரும் தங்களின் விழாக்களில் பேனர் வைக்கின்றனர். அப்படி இருக்கின்ற நேரத்தில் இளம்பெண் சுபஸ்ரீ அந்த இடத்தைத் தாண்டிச் சென்றுள்ளார். அந்தக் கணத்தில் காற்றில் பேனர் விழ வேண்டும்; தண்ணீர் லாரி அவர் மீது ஏற வேண்டும்; அவர் இறக்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது.

அது நடந்துவிட்டது. இது யதார்த்தமாக நடந்த ஒன்று. இதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன'' என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இதனால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்ற பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன், சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x