Published : 23 Sep 2019 01:15 PM
Last Updated : 23 Sep 2019 01:15 PM

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்: கூட்டணிக் கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் விருப்ப மனு பெறுவதால் குழப்பம்

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக விருப்ப மனு பெற்று வரும் நிலையில், பாஜகவும் விருப்ப மனுக்களைப் பெற்று வருவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் சட்டப்பேரவை தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை அதிமுக பிடித்தது.

இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது முடிவான நிலையில், காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு இன்று (செப்.23) காலை 9 மணி முதல் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் நமச்சிவாயம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயக்குமார், முதல்வருக்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் உள்ளிட்டோர் விருப்ப மனு பெற்றனர்.

காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு விநியோகம்

அதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி விருப்ப மனு அளிக்கவில்லை. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக விருப்ப மனு தரும் பணியைத் தொடங்கியது. அதன்படி அதிமுகவில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் சேர்ந்த நாகராஜன் விருப்ப மனுவைப் பெற்றுள்ளார்.

அதிமுக தலைவர்கள், இடைத்தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய மூன்று சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என கூறி வருகின்றனர். மேலும், இம்மூன்று தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் நேற்று முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். இந்நிலையில், காமராஜர் நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவும் விருப்ப மனு பெற்று வருவதால், அத்தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிட உள்ளது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸில் யாருக்கு?

காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தொழிலதிபரும், காங்கிரஸ் உறுப்பினருமான ஜெயக்குமாரைக் களமிறக்க விரும்புகிறார். நெல்லித்தோப்பு தொகுதியில் தனக்காகப் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ ஜான்குமாருக்கு முதல்வர் நாராயணசாமி ஆதரவு உள்ளது. முக்கியமாக இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய எம்.பி. வைத்திலிங்கத்துக்கு இத்தொகுதியில் செல்வாக்கு உள்ளதால் வேட்பாளர் தேர்வில் அவரது முடிவும் முக்கியமானதாக இருக்கும்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x