சுற்றுப்பயணத்தை சுற்றுலாப் பயணமாக்கிய முதல்வர், அமைச்சர்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுற்றுப்பயணத்தை சுற்றுலாப் பயணமாக்கிய முதல்வர், அமைச்சர்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை

அரசு சார்பில் சென்ற வெளிநாடு சுற்றுப்பயணத்தை முதல்வர், அமைச்சர்கள் சேர்ந்து சுற்றுலாப் பயணமாக்கி விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சொந்தத் தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து 2016-ம் ஆண்டு முதல், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பலமுறை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளேன்.

அப்போது பதில் சொல்லும் மின்துறை அமைச்சர், விளக்கம் அளித்துள்ளார், குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து ரூ.2,657 கோடியைப் பெற்று மின்கம்பிகள் அனைத்தையும் புதைவடிவ கம்பிகளாக மாற்ற உள்ளோம் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து 7 முறை இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். அதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கியுள்ளன. வேலை நடக்கும் வேகத்தைப் பார்த்தால் 2021 மார்ச்சில் தான் முடிவடையும் போல உள்ளது. உயிர்ப்பலி ஆவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாகப் பணியாற்ற வேண்டும். கணேஷ் நகரில் சீரான, தடையில்லாத மின்சாரம் தேவை.

கொளத்தூர் -வில்லிவாக்கம் பகுதியை இணைக்கக்கூடிய எல்சி 1 பணிகளை ரயில்வே முடித்துள்ள நிலையில், மாநராட்சியும் உரிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாடு சுற்றுப் பயணத்தை சுற்றுலாப் பயணமாக்கிவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். நீர் நிலைகளை மேம்படுத்தவும் மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணத்தை முதல்வர் மேற்கொள்கிறார் என்று செய்திகள் வெளியாகின. சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு நீர் நிலைகள் தூர் வாருவதைக் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றார் ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in