Published : 23 Sep 2019 12:16 PM
Last Updated : 23 Sep 2019 12:16 PM

புதுச்சேரியில் பாதியில் நிற்கும் ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள்; வட்டி செலுத்தும் ஏராளமான நடுத்தரக் குடும்பத்தினர்

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான நடுத்தரக் குடும்பத்தினர் வீடு கிடைக்காமலேயே வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் பாதியில் நிற்கும் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள்தான். இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ரூ.150 கோடி வருவாய் வரவும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 2017-ல் 'ரெரா' என குறிப்பிடப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் மனை, வீடு வாங்குவோரின் நலனுக்காக கட்டுமானத் துறையின் வெளிப்படைத்தன்மை அறியும் வகையை இச்சட்டம் உறுதி செய்கிறது.

'ரெரா' சட்டமானது வீடு வாங்குவோருக்கு ஏற்படும் சிக்கலுக்கு வழிகாட்டுவதுடன் நிவாரணமும் இரண்டு மாதங்களில் பெற முடியும். இது நுகர்வோருக்கு மிகவும் பலன் தரும் சட்டம். ஆனால் புதுச்சேரியில் நிலைமை தலைகீழ். இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த 2017-க்கு முன்பு கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் நின்று விட்டன.

இதில் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்கள் தரப்பில் கூறுகையில், "தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பலரும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பதிவு செய்து வங்கி மூலம் கடன் பெற்றுத் தந்தோம். ஆனால், இன்னும் குடியிருப்பு கைக்கு வரவில்லை. ஆனால், வாங்கிய கடனுக்கான வட்டியை மாதம்தோறும் எங்களின் வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 'ரெரா' வந்த பிறகு எனது கட்டிடம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 'ரெரா' சட்டப்படி 8 பிளாட்டுக்கு மேல் வந்தால் பதிவு செய்யவேண்டும். ஏற்கெனவே பழைய கட்டுமானம் தொடர்பாக நகர வளர்ச்சி குழுமத்தில் பதிவு செய்ய முடியவில்லை. புதுச்சேரி அரசும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர் வீட்டு வாடகையும் தருவதுடன், வங்கியிடம் பிளாட்டுக்கு வாங்கிய தொகைக்காக வட்டியையும் கட்டி வரும் சூழலில் உள்ளோம். பிளாட்டும் கட்டப்படவில்லை. வட்டியும் கட்டுகிறோம். பழைய திட்டங்களை நிறைவு செய்ய பல மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியும் இதைச் செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்," என்கின்றனர்.

இதுதொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் தங்க மணிமாறனிடம் கேட்டதற்கு, "ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கிறது. 'ரெரா' அமலான பிறகு விற்கவும் முடியவில்லை, பதிவு செய்ய முடியவில்லை, கட்டவும் இயலவில்லை. 'ரெரா' சட்டத்தில் புதுச்சேரி அரசு திருத்தம் கொண்டு வரவில்லை. நகரத் திட்டக் குழுமம் உத்தரவால் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு விட்டது. நிதி முற்றிலும் இதனால் முடங்கியுள்ளது.

இந்நிலையில் பழைய திட்டக் கட்டுமானங்களை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளித்தால் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கிடைக்கும். வேலை தொடர்ந்து நடந்தால் பொறியாளர், தொழிலாளர் வேலை இழப்பு இருக்காது. அரசுக்கு திட்டங்களின் மூலம் விற்காத வீடுகள் விற்பனை ஆவதின் மூலம் சுமார் ரூ.150 கோடி வரி வருவாய் கிடைக்கும்," என்று தெரிவித்தார்.

நடுத்தர ரியல் எஸ்டேட் கட்டுமானத் தரப்பில் விசாரித்தபோது, "ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம் வாடிக்கையாளர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்திய சட்டமுறையாகும். சட்டம் அமலான 2017-க்குப் பிறகு மேற்கொள்ளும் திட்டங்களில் செயல்படுத்தத் தயாராக உள்ளோம். புதுச்சேரியில் அடுக்குமாடி வீட்டுக்கான விற்பனை வேகம் குறைந்துள்ள நிலையில் வீட்டின் விலைகளும் பழைய சட்டத்தின் மூலம் செய்யும்போது குறைவாகவும், புதிய சட்டப்படி செய்யும்போது 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை விலை அதிகமாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அங்குள்ள சூழ்நிலைகளைக் கருதி விதிகள் ஏற்படுத்தி கொள்ள இச்சட்ட வழிமுறை வகை செய்துள்ளது. குறிப்பாக யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி அரசுக்கு மட்டும் இவ்வுரிமை தரப்பட்டுள்ளது," என்கின்றனர்.

அறிக்கைக்குப் பிறகு 'ரெரா'வில் திருத்தம்

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "இவ்விவகாரம் அரசு கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 'ரெரா' விதி அமலான பிறகு நிலம் மற்றும் கட்டுமானம் வாங்குதல், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வருவாய்த்துறை செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 'ரெரா' விதிகள் புதுச்சேரியில் திருத்தம் செய்யப்படும்," என்று தெரிவித்தனர்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x