

தேனி
சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்ததாக எழுந்த புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் இன்று (திங்கள்கிழமை) மதுரை விரைந்துள்ளனர்.
தேனி மருத்துவக் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உயரதிகாரி ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.மாணவர் உதித் சூர்யாவின் தந்தையும் மருத்துவரமான வெங்கடேஷும் தேனி மருத்துவக் கல்லூரியின் அந்த உயரதிகாரியும் ஒன்றாகப் படித்து, பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் சுமார் 4 மணி நேரம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
2-வது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவில் இருந்த துணை முதல்வர் எழிலரசன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது குறுக்கீடுகள், தலையீடுகள் இருந்ததா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இரண்டு நாட்களாக நடந்த விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொண்டதாகத் தனிப்படை போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ஹால்டிக்கெட் நகல், ஆவணங்கள் நகல் தவிர சில முக்கிய ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் தேனி தனிப்படை போலீஸார் இன்று மதுரை விரைந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு எப்போது வேண்டுமானலும் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உதித் சூர்யாவின் முன் ஜாமீனுக்கு தடை கோரும் வகையில் தேனி தனிப்படை போலீஸார் மதுரை விரைந்துள்ளனர்.
தனிப்படை குழுவில் க.விலக்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் உஷாராணி, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.