

நியூஜெர்சி
சாதியவாதம் ஒரு பெரும் வன்கொடுமை என ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும் என, மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அமெரிக்காவின் சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அமெரிக்காவில் நியூஜெர்சியில் நடைபெற்ற 'சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள்' என்னும் சர்வதேச மாநாட்டில் நேற்று (செப்.22) பங்கேற்றார். இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் மற்ற உறுப்பினர்களுடன் தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன் இம்மாநாட்டில் பேசியதாவது:
"இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்கள் இருக்கின்றன. தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் சாதியின் பெயரால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
சாதி என்னும் அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. வன்கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். தலித்துகளை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று மற்ற சமூகத்தினர் கருதுகிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல. எனவே, எங்களுக்கு உலக அளவில் நாடாளுமன்றத்தினரின் ஆதரவு தேவை. முதலில் நாம் இந்தப் பிரச்சினையை ஐநா சபையில் கொண்டுவர வேண்டும்.
ஐநா சபை இனவாத ஒழிப்பை அங்கீகரித்தது மற்றும் இனவெறியால் நடைபெற்ற வன்கொடுமைகளை அகற்றுவதற்கான தீர்வைக் கண்டறிந்தது. ஆனால், ஐநா சபையில் சாதி ஒழிப்புக்கான திட்டங்கள் ஏதும் இதுவரையில் இல்லை.
எனவே, 'சாதியவாதம்' என்பது ஒரு ‘வன்கொடுமை’ என உலக அளவில் அங்கீகரிக்க, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டைவிட 2016 ஆம் ஆண்டில் 5.5% சாதிக் கொடுமைகள் அதிகரித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட்டதாகக் குறிப்பிடும் இந்திய அரசு இதை ஒரு உலகளாவிய பிரச்சினையாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
எனவே, சாதியவாதப் பிரச்சினையை அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது செனகல் அரசாங்கத்தின் மூலமாகவோ ஐநா சபையில் எழுப்ப வேண்டுமென அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இனவாதத்தைப் போல் சாதியவாதமும் ஒரு வன்கொடுமை என அங்கீகரித்து ஐநா சபை ஏற்றுக்கொள்ள வேண்டும்,".
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.