

சென்னை
படம் ஓட வேண்டும் என்பதற்காக அதிமுக மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக, நடிகர் விஜய் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்.23) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "கடந்த காலங்களில் ஜிஎஸ்டி என்றாலே அச்சம் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் எடுத்தவைத்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. ஜிஎஸ்டி காரணமாக, சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு.
தமிழகத்தில் சிறு, குறு வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப்பட்டது. ஒன்றரை கோடி வரை அவர்கள் இணக்க முறையில் வரி செலுத்தலாம். ஜிஎஸ்டி விவகாரத்தில் அகில இந்திய அளவில் பிரச்சினைகள் இருக்கக் கூடாது என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உணவகங்களுக்கு அறை வாடகையைப் பொறுத்து வரி விலக்கு, வரிக்குறைப்பு அளித்துள்ளனர்," எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "இரு தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. மக்கள் அதனை உணர்ந்திருக்கின்றனர். மக்களவைத் தேர்தலையும், இடைத்தேர்தலையும் ஒப்பிட முடியாது. வேலூர் மக்களவைத் தொகுதியில், 18 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. குறுகிய காலத்திலேயே வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. திமுக தப்பித்தோம் பிழைத்தோம் என்றுதான் வேலூரில் வெற்றி பெற்றது. போலியான மாயத் தோற்றத்தை திமுக உருவாக்கியிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
பேனர் விபத்து தொடர்பாக நடிகர் விஜய்யின் கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவைத் தொட்டால்தான் ஆளாக முடியும் எனத் தொடுகிறார்கள். ஆனால், அதிமுகவைத் தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன," என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.