Published : 23 Sep 2019 10:43 AM
Last Updated : 23 Sep 2019 10:43 AM

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவதையொட்டி மாமல்லபுரம் விடுதிகளுக்குக் கடும் கட்டுப்பாடு 

சென்னை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவதையொட்டி, மாமல்லபுரத்தில் தங்கும் விடுதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் மாதம் 11-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும், பாரதப் பிரதமரும் சீன அதிபரும் அக். 13-ம் தேதி வரை தங்கிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்கள் இருவரும் கோவளம் பகுதியில் உள்ள பிஷர்மேன் கோவ் ரிசார்ட் என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோவளம் பகுதியில் உளள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்குக் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் விடுதி உரிமையாளர்கள், நிர்வாகிகள் இடையே கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஏடிஎஸ்பி பத்ரி நாராயணன், ''விடுதிகளில் மாதக்கணக்கில் தங்கியிருக்கும் இலங்கை, திபெத் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து தங்கியுள்ளவர்களின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட விவரங்களை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கவேண்டும்.

அதேபோல சுற்றுலாப் பயணிகளின் அசல் அடையாள அட்டைகளைப் பெற்ற பிறகே அறைகளை ஒதுக்க வேண்டும். அடையாள அட்டையைத் தர மறுப்பவர்களை, விடுதியில் தங்க அனுமதிக்கக் கூடாது.

அக்டோபர் 12, 13-ம் தேதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அறை ஒதுக்கித் தருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விதிகளை மீறும் விடுதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, சீன அதிபரின் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் சீனப் பாதுகாப்பு அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக சுற்றுலா அதிகாரிகள், உள்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் வருகையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், சாலைகளில் இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x