

ரெ.ஜாய்சன்
தூத்துக்குடி
இயற்கை உணவு மீது தற்போது ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக மக்கள் மத்தியில் கருப்பட்டி மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆனால், உற்பத்தி குறைவு காரணமாக கருப்பட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சு வதன் மூலம் கருப்பட்டி தயாரிக்கப் படுகிறது. இதனை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்கின்றனர். கருப்பட்டி உற்பத்திக்கு பெயர் பெற்றது தூத்துக்குடி மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள உடன்குடி, வேம்பார் பகுதிகளில் அதிக அளவு கருப்பட்டி தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உடன்குடி கருப்பட்டி உலகளவில் புகழ்பெற்றது.
கருப்பட்டியானது ரத்தத்தை சுத்திகரித்து உடலை சுறுசுறுப் பாக்குவதோடு, மேனியை பளபளப் பாகவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறவும் கருப்பட்டி முக்கியமானதாக விளங்குகிறது. காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும் என்று மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர்.
மவுசு அதிகரிப்பு
சீனி எனப்படும் சர்க்கரை வந்த பிறகு கருப்பட்டி மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. இதனால் கருப்பட்டி தொழிலின் எதிர்காலமே கேள்விக்குறியானது. இந்நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மக்களுக்கு இயற்கை உணவு மீது அதீத நாட்டம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கருப்பட்டியின் நன்மைகள் குறித்து வரும் தகவல்களால், கருப்பட்டிக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், பனை மரங்கள் அழிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் பனைத் தொழில் பாதிப்படைந்து, கருப்பட்டி உற்பத்தி பன்மடங்கு குறைந்துள்ளது. இதனால், கருப்பட்டி கடுமையான விலை யேற்றத்தை சந்தித்து வருகிறது.
விலை மேலும் உயரும்
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த கருப்பட்டி மொத்த வியாபாரி குமார் கூறியதாவது: ஒரிஜினல் கருப்பட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் கருப்பட்டி விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிலோ
ரூ.300 முதல் ரூ.330 வரை விற்பனையான கருப்பட்டி, தற்போது ரூ.350 முதல் ரூ.370 வரை விற்பனையாகிறது. உடன்குடி கருப்பட்டி 10 கிலோ சிப்பம் ரூ.3,300 முதல் ரூ.3,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேம்பார் கருப்பட்டி ரூ.3,060 முதல் ரூ.3,150 வரை விற்பனையாகிறது.
சீஸன் நேரத்தில் பதநீரை கருப்பட்டி உற்பத்திக்கு பயன்படுத்தாமல், பனங்கற்கண்டு உற்பத்திக்கு பயன்படுத்தியதால், கருப்பட்டி உற்பத்தி பெரும் சரிவைச் சந்தித்து, விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. போதிய இருப்பு இல்லாததால் கருப்பட்டி விலை மேலும் உயரும் என்றார் அவர்.
கலப்பட புகார்
உடன்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.குணசீலன் கூறியதாவது: பதநீர் சீஸன் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தான். இந்த காலத்தில் தான் கருப்பட்டி தயாரிக்க முடியும். ஆனால், கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படுகிறது.
விலை குறைந்த சர்க்கரையை கொண்டு இந்த கலப்பட கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான சில்லரை விற்பனை கடைகளில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு எனும் பெயரில் தரமில்லாத சர்க்கரை மற்றும் மொலாசிஸ் கொண்டு தயாரிக்கப் படும் கலப்பட கருப்பட்டி, கற்கண்டு முறையான லேபிள் ஒட்டப்படாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
கலப்பட கருப்பட்டி காரணமாக ஒரிஜினல் கருப்பட்டி விற்பனையும் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.ரூ.1 லட்சம் வரை அபராதம்
உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் ஆர்.கருணாகரன் கூறியதாவது: கலப்பட கருப்பட்டி புகாரைத் தொடர்ந்து, கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு 2 முறை விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சீனி கலக்காத சுத்தமான பதநீரில் இருந்து கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கப்பட்டால் மட்டுமே பனங்கருப்பட்டி, பனங்கற் கண்டு என்று லேபிளில் குறிப்பிட வேண்டும். சீனி 1 சதவீதம் கலந்திருந்தாலே அது கலப்படமானது என்று அறிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படுவதோடு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டப்படி கட்டாயம் உரிமம் எடுத்து தான் உணவு தொழில் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.