

கோவை
‘பிரதம மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா' என்ற விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட அறிக்கை: விவசாயிக ளுக்கு கை கொடுக்கும் வகையில், ‘பிரதம மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா' என்ற விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு துறை மற்றும் விவசாயிகள் நலத் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ள விவசாயிகள், 60 வயது பூர்த்தியாகும்போது ஓய்வூதியம் பெற வழிவகை செய்யப்படும். விவசாயிகள் செலுத்தும் காப்புறுதி தவணைத் தொகைக்கு இணை யாக, மத்திய அரசு தனது பங்குத் தொகையைச் செலுத்தும்.
18 முதல் 40 வயது வரையுள்ள சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத் தில் இணைந்து, தங்களுடைய வயதுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.200 வரை காப்புறுதி செலுத்தி வர வேண்டும். 60 வயது பூர்த்தியானவு டன் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெற முடியும். இத்தொகையை மாதந்தோறுமோ, காலாண்டுக்கு ஒருமுறையோ, அரையாண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ பிரீமியமாக செலுத்தலாம். இத்தொகையை வங்கிக் கணக்கு மூலமாகவோ, பிரதம மந்திரியின் கிஸான் சமான் நிதி திட்டத்தில் இணைந்திருப்பின் அதில் இருந்தும் செலுத்தலாம்.
இத்திட்டத்தில் தொடர விருப் பம் இல்லாத விவசாயிகள், செலுத் திய தொகையை வட்டியுடன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆர்வ முள்ள விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் தங்களுடைய ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங் களை சமர்ப்பித்து, இணைய தளத்தில் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.
பெயர், ஆதார் எண், பிறந்த தேதி, கணவன் அல்லது மனைவி பெயர், வாரிசுகளின் பெயர்கள், செல் போன் எண், பிரீமியம் செலுத்தும் பருவம் ஆகியவை பதிவு செய்யப் பட்டு ரசீது வழங்கப்படும். மேலும், ஓய்வூதிய கணக்கு எண்ணுடன் கூடிய அடையாள அட்டையும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். திட்டம் தொடர்பான விளக்கங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வயதும், தொகையும்
வேளாண்மைத் துறையினர் கூறும்போது, ‘18 வயது நிரம்பியவர்கள் ரூ.55, 19 வயதினர் ரூ.58, 20 வயதினர் ரூ.61, 21 வயதினர் ரூ.64, 22 வயதினர் ரூ.68, 23 வயதினர் ரூ.72, 24 வயதினர் ரூ.76, 25 வயதினர் ரூ.80, 26 வயதினர் ரூ.84, 27 வயதினர் ரூ.88, 28 வயதினர் ரூ.95, 29 வயதினர் ரூ.100, 30 வயதினர் ரூ.105, 31 வயதினர் ரூ.110, 32 வயதினர் ரூ.120, 33 வயதினர் ரூ.130, 34 வயதினர் ரூ.140, 35 வயதினர் ரூ.150, 36 வயதினர் ரூ.160, 37 வயதினர் ரூ.170, 38 வயதினர் ரூ.180, 39 வயதினர் ரூ.190, 40 வயதினர் ரூ.200 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயி எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,500 தொடர்ந்து வழங்கப்படும்' என்றனர்.