

டி.ஜி.ரகுபதி
கோவை
மழைநீர் சேகரிப்பு திட்ட கட்டமைப்பு மாதிரி விவரங்களை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி இணையதள பக்கத்தில் பதிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், 2001-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அனைத்து வகை கட்டிடங்களின் மீது விழும் மழைநீர் வீணாகாமல் நிலத்துக்கு சென்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்யப்பட்டது. பின்னர், இடைப்பட்ட சில காலங்களில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என புகார் எழுந்தது.
இதற்கிடையே, ‘‘நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என, தமிழக அரசு சார்பில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு 3 பேர் என 100 வார்டுக்கு 300 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப் பட்டது.
இக்குழுவினர், வீடு வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டுக்கும், மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் அரசால் தீவிரப்படுத்தப்பட்ட ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில், ஏராளமான கட்டிடங் கள் கட்டப்பட்டுள்ளன. அதில், குறிப்பிட்ட சதவீத கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
மேலும், திடீரென மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமெ ன்றால் யாரை அணுகுவது, எந்த அளவுக்கு கட்டமைப்பு ஏற்படுத்துவது என்பது போன்ற சந்தேகங்கள் தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி பொதுமக்கள் விசாரித்து வருகின்ற னர்.
40 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது, ‘‘அனைத்து வகை கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
தற்போதுவரை மாநகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத 40 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சிறிய பரப்பளவு, சற்று பெரிய பரப்பளவு, மிகப்பெரிய பரப்பளவு ஆகிய 3 வகை வீடு உள்ளிட்ட கட்டிடங்களில் எந்தெந்த அளவுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தலாம் என்பது குறித்து, 3 வித மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மாதிரி அளவு விவரங்கள், அதற்கான செலவினத் தொகை, கட்டமைப்பை ஏற்படுத்தி தருபவர்களின் விவரம் ஆகியவை, மாநகராட்சி நிர்வாகத்தின் பிரத்யேக இணையதள பக்கத்தில் விரைவில் பதிவிடப்பட உள்ளது.
இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மழைநீரை வீணாக்காமல் தொட்டியில் சேமித்து குடிக்க பயன்படுத்தலாம். அது நிரம்பினால், அருகில் உள்ள போர்வெல் குழாய் மூலமாக நிலத்துக்கு செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் தெரிவிக்கப்படும்’’ என்றார்.
600 கட்டிடங்களில்...
மாநகராட்சிக்கு சொந்தமான 600 கட்டிடங்களில், 1000-ம் இடங்களில் மழைநீர் சேகரித்து பயன்படுத்தும் வகையில் தொட்டிகள், நிலத்தில் போர்வெல் குழாய் அமைத்து மழைநீர் நேரடியாக நிலத்துக்கு கொண்டு செல்லும் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.