Published : 23 Sep 2019 08:31 AM
Last Updated : 23 Sep 2019 08:31 AM

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 3-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறுவது நேற்று தொடங்கியது. இன்று மாலை 3 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம். விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்துகின்றனர்.

தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்கு நேரி இரண்டும் திமுக கூட்டணி வசம் இருந்த தொகுதிகள். பேரவைத் தலைவரையும் சேர்த்து சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை யானதைவிட 6 எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். எனவே, இரு தொகுதிகளில் அதிமுக வென் றாலும், தோற்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், இந்த இரு தொகுதி களிலும் வென்றால் அதிமுகவின் பலம் அதிகரித்து அடுத்த ஒன் றரை ஆண்டுகளுக்கு பிரச்சினை யில்லாமல் ஆட்சியை நடத்த முடியும் என்று முதல்வர் பழனி சாமி நினைக்கிறார். இதனால் இடைத்தேர்தலில் வெற்றிபெற தீவிர முயற்சிகளில் அதிமுக இறங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக தலைமைக் கழகத்தில் வரும் 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், அமைப்புச் செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x