

சென்னை
முதுமைக் கால நோய்களைத் தடுக்க மருத்துவ பரிசோதனை, சத்தான உணவு மற்றும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் அவசியம் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
'இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும் அருண் எக்செல்லோ இணைந்து, முதியோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி 'கிளப் 50 பிளஸ்’ என்ற நிகழ்ச்சி சென்னை ராயப் பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது.
அதில் டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக் கட்டளை நிறுவனர், தலைவர் வி.எஸ்.நடராஜன் பங்கேற்று பேசியதாவது:
முதுமைக் காலத்தில் உடலில் நோய் அறிகுறிகள் எளிதில் தென்படாது. அதுதான் முதுமையில் உள்ள முக்கிய பிரச்சினை. அதனால் ஆண்டுக்கொரு முறை முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அன்றாடம் 40 நிமிடம் வெயிலில் எளிய நடைபயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, கெட்ட கொழுப்பு குறையும். எலும்பு வலுப் பெறும். இரவில் நன்றாக தூக்கம் வரும். வெறும் வயிற்றில் உடற் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
முதுமைக் காலத்தில் மயக்கம் வர வாய்ப்புள்ளதால், உடற்பயிற்சிக்கு செல்லும்போது உடன் அடையாள அட்டை ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.
அரை வயிறு உணவு சாப் பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அரிசி உணவைத் தவிர்த்து, கலோரி குறைவான கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானிய உணவுகளை உண்ண வேண்டும். இதன் மூலம் அதிக புரதம், கால்ஷியம், நார் போன்ற சத்துகள் கிடைக்கும்.
உப்பைக் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். நிமோனியா காய்ச்சலால் உயிரிழப்பதைத் தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள் ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:
அன்று ஊருக்குள்ளேயே அனைத்தும் கிடைத்தது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். பிரச் சினை ஏதும் இல்லை. காலம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. பொருள் தேடி கடல் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாற்றத் துக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். பல்வேறு கருத்துகளைக் கூறி நம்மை கோபப் பட வைக்க பலர் உள்ளனர்.
சேர்ந்து வாழ முடிந்தால் வாழ்வோம். தனியாக வாழ்ந்தால் சந்தோஷம் இருக்குமானால் அதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்போம். அதற்கேற்ப மனதை மென்மைப்படுத்திக் கொள்வோம். கோபத்தை ஓரளவு அடக்கிக் கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இசைக்கவி ரமணன் பேசும்போது, "உறவும், சூழலும் தான் வாழ்க்கையை மாற்றுகின்றன. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம் மிக குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பழைய காலத்துக்கு திரும்பிச் செல்ல முடியாது. இதற்கு குழந் தைகள் காரணமில்லை. கால மாற்றம்தான் காரணம் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகர்களின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் அருண் எக்செல்லோ குழும மேலாண் இயக்குநர் பி.சுரேஷ், இயக்குநர்கள் பி.கார்த்திகேயன், எம்.சுந்தர், ராஜாஜி, அக்குழுமத்தைச் சேர்ந்த அருண் சுரேஷ், பிரேம் சுரேஷ், அருண் எக்செல்லோ குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர்ராமன் சிந்தாமணி, இந்து தமிழ் திசை நாளிதழின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், விற்பனை பிரிவுத் தலைவர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.