Published : 23 Sep 2019 06:49 AM
Last Updated : 23 Sep 2019 06:49 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: வேட்பாளர் தேர்வில் அதிமுக, திமுக, காங்கிரஸ் தீவிரம்- சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம்

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காங் கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்த குமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கு கிறது. வரும் 30-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 3-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் அதிமுகவை ஆதரிக் கின்றன. திமுக தலைமையி லான கூட்டணியில் விக்கிர வாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

நேர்காணல்

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறு வது நேற்று தொடங்கியது. இன்று மாலை 3 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்க லாம். விருப்பமனு அளித்த வர்களிடம் இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்து கின்றனர்.

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்பு வோர் இன்று மாலை 6 மணிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் நாளை (செப். 24) காலை 10 மணிக்கு வேட்புமனு அளித்த வர்களிடம் நேர்காணல் நடைபெறும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அதுபோல நாங்குநேரி தொகுதி யில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் இன்று முதல் 3 நாள்களுக்கு விருப்ப மனுக் களை அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதனால் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி யினர் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 20 தொகுதிகளில் வென்றால் திமுக ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருந்ததால் அதிமுக, திமுக இரு கட்சிகளும் மக்களவைத் தொகுதிகளைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தின.

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 39-ல் திமுக கூட்டணி வென்றது. ஆனால், பேரவை இடைத்தேர் தலில் திமுக 13 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதிமுக 9 இடங்களில் வென்றதால் ஆட்சியைத் தக்கவைத்தது. அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் ஈடேறவில்லை.

ஆட்சிக்கு பாதிப்பு இல்லை

தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்கு நேரி இரண்டும் திமுக கூட்டணி வசம் இருந்த தொகுதிகள். பேரவைத் தலைவரையும் சேர்த்து சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை யானதைவிட 6 எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். எனவே, இரு தொகுதிகளில் அதிமுக வென் றாலும், தோற்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், இந்த இரு தொகுதி களிலும் வென்றால் அதிமுகவின் பலம் அதிகரித்து அடுத்த ஒன் றரை ஆண்டுகளுக்கு பிரச்சினை யில்லாமல் ஆட்சியை நடத்த முடியும் என்று முதல்வர் பழனி சாமி நினைக்கிறார். இதனால் இடைத்தேர்தலில் வெற்றிபெற தீவிர முயற்சிகளில் அதிமுக இறங்கியுள்ளது.

திமுக கலக்கம்

மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி தந்த பலத்துடன் திமுக, காங்கிரஸ் களமிறங்குகிறது. ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் சொற்ப வாக்குகளில் கிடைத்த வெற்றி அவர்களை கலக்கமடையச் செய்துள்ளது. இடைத்தேர்தலில் வென்றால் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் பலன் கொடுக்கும் என்று திமுக நினைக் கிறது. இதனால் இடைத்தேர்தலில் வெல்ல திமுகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விருப்ப மனுக்கள் பெறுதல், ஆலோசனை, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

போட்டி இல்லை: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

சென்னை

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக, திமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் சார்பில் இன்று விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெருவாரி மக்களின் எண்ணப்படி, பழைய கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும் ஆட்சியில் இருந்து அகற்றி 2021-ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தங்கள் தலைவர்களையும், அவர்களது தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத் தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது. இவ்வாறு அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x