

என்எல்சி தொழிற்சங்கங்களுடன் சென்னையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) 12 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2011-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. இதையடுத்து, 2012 ஜனவரி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கக் கோரி என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின. இதில் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், என்எல்சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை சாஸ்திரிபவனில் நேற்று முத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்திய அரசின் மண்டல தொழிலாளர் ஆணையர் கே.சேகர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் அண்ணா தொழிற் சங்க தலைவர் அபு, செயலாளர் ராம உதயகுமார், பொருளாளர் மோகனசுந்தரம், தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் சா.ராசவன்னியன், பொருளாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்எல்சி நிர்வாகம் சார்பில் தலைமைப் பொதுமேலாளர் மகேஸ்வரன், பொதுமேலாளர் (மனித வளம்) சுந்தர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
மதியம் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 4 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தொமுச பொதுச் செயலாளர் சா.ராசவன்னியன், நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 42 மாதங்களாக நீடித்து வரும் என்எல்சி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து இதுவரை 27 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோரி வருகிறோம். ஆனால், நிர்வாக தரப்பில் 10 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க முடியும் என கூறுகின்றனர்.
இதைத் தவிர, இறந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு, இன்கோசர்வ் தொழிலாளர்கள் இரண்டாயிரம் பேரை பணிநிரந்தரம் செய்தல் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் பேச்சுவார்த்தையின்போது முன் வைத்தோம். ஆனால், இக்கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் தரப்பில் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை.
போராட்டம் தொடரும்
இதனால், முத்தரப்பு பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டாமல் தோல்வியடைந்துவிட்டது. எனவே, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். என்எல்சி நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. ஆண்டுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. எனினும், ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு சா.ராசவன்னியன் கூறினார்.