Published : 22 Sep 2019 03:47 PM
Last Updated : 22 Sep 2019 03:47 PM

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

சென்னை

வரும் அக்டோபர் 21, 2019 நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைக்கான விககிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21, 2019 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மதவாத, சாதிவெறி சக்திகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்ததது.

மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற்றதை நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டது உட்பட மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதக் கொள்கைகளையும், இந்தி மொழி திணிப்புப் போன்ற அத்துமீறல்களையும் எதிர்த்துப் போராடி வருகிறது. கொள்கைகளை மதச்சார்பற்ற ஜனநாயக, இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைந்தும், தனித்தும் போராடி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 21, 2019 நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபடுவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரிக்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x