Published : 22 Sep 2019 03:30 PM
Last Updated : 22 Sep 2019 03:30 PM

நாங்குநேரி இடைத்தேர்தல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது; வரும் 25-ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு: சீமான்

சென்னை

நாங்குநேரியில் இடைத்தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான பொருள் இழப்பை யார் ஏற்பது? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 25-ம் தேதி அறிவிக்கப்படுவர். பிரச்சாரம் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தொடங்கப்படும்.

விக்கிரவாண்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்ததால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடக்கிறது. நாங்குநேரியில் தேர்தல் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விளையாட்டு. ஒரு கட்சி ஒருவருக்கு இரண்டு பதவிகளைக் கொடுக்கிறது. அந்த வாய்ப்பை ஏன் அந்தக் கட்சி இன்னொருவருக்குக் கொடுக்கவில்லை?

சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற உடன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். இதனால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான பொருள் இழப்பை யார் ஏற்பது?

இரவு உணவு இல்லாமல் பல கோடி மக்கள் தூங்கும் ஏழை நாடு இந்தியா. பச்சிளம் குழந்தைகள் பசியுடன் உணவில்லாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் பல கோடி ரூபாய் செலவழித்து ஒரு இடைத்தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடத்துவதால் தேவையற்ற நேர விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது.

இரு தொகுதி இடைத்தேர்தலிலும் இரண்டு கட்சிகளும் வாக்காளர்களை விலைக்கு வாங்குவார்கள். மக்கள் மீது குறையில்லை. அவர்களை வறுமை நிலையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் குறைதான் இது. இந்த இடைத்தேர்தலை எப்போதோ நடத்தி முடித்திருக்கலாம்''.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதுபோல 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.ராதாமணி. திமுகவைச் சேர்ந்த இவர் கடந்த ஜூன் 14-ம் தேதி காலமானார்.

இதையடுத்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருப்பதாக தமிழக சட்டப்பேரவை அறிவித்தது. தேர்தல் ஆணையத்துக்கும் இது முறைப்படி தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, 2 தொகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x