Last Updated : 22 Sep, 2019 11:43 AM

 

Published : 22 Sep 2019 11:43 AM
Last Updated : 22 Sep 2019 11:43 AM

காங்கிரஸுக்கும் காந்திக்கும் தொப்புள் கொடி உறவு; பாஜகவுக்கு துப்பாக்கி தான் உறவு: கே.எஸ். அழகிரி கடும் தாக்கு

தூத்துக்குடி

காந்திக்கும் காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பாஜகவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு உண்டு என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்‌.அழகிரி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதன்பொருட்டு கன்னியாகுமரியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காந்தியின் நினைவுக்கும் கன்னியாகுமரிக்கும் மிகுந்த பொருத்தமுடையது. ஆனால் பாஜகவினர் தற்போது எல்லாவற்றையும் புதிதாகச் செய்து வருகிறார்கள்.

காந்திக்கும்- காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பாஜகவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு உண்டு. சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒரு நிமிஷம் கூட சிறையில் இருந்தது கிடையாது ஆனால் எங்களுடைய ஜனநாயகம் அவர்களையும் அங்கீகரித்துள்ளது.

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் வெற்றிக்கு நாங்கள் கடுமையாகப் பணியாற்றுவோம். தேர்தல் பிரச்சாரத்திற்கு நிச்சயமாக வைகோவை அழைப்போம். தமிழக எம்.பி.க்கள் ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே மாதத்தில் செய்துள்ளனர். தபால் துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தமிழில் தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைவிட ஆக்கபூர்வ நடவடிக்கை வேறு எதுவும் வேண்டாம்.

இடைத்தேர்தலில், பணம் மக்களைச் சென்று சேராது. சேவைதான் மக்களைச் சென்று சேரும். ஆகவே சேவையை முன்வைத்து இடைத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம்.

தமிழக அரசு செயலிழந்து விட்டது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெற முடியவில்லை. மத்திய அரசை எதிர்த்துக் கூடப் பேச முடியாமல் இருக்கிறார்கள். எனவே இந்த அடிமை அரசு தேவையா?. இந்த அடிமை அரசை நீக்கிவிட்டு மக்கள் அரசை ஏற்படுத்த வேண்டும்.

மத்தியிலும் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. மோட்டார் வாகன உற்பத்தி சரிவடைந்துவிட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. விவசாயப் பொருள் உற்பத்தியும் 2 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மத்திய அரசின் ஆண்டு செலவு 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. ஏனெனில் செலவு செய்வதற்கு மத்திய அரசிடம் பணம் இல்லை.

தொழில் உற்பத்தியை பெருக்க ஜிஎஸ்டி வரியை நெறிப்படுத்தி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெரு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளுமே லாபம் அடைவர். மத்திய அரசு எதிரும் புதிரான செயல்களைச் செய்து வருகிறது. இதற்கு பெயர்தான் துக்ளக் ஆட்சி.

இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி. மோடி என்பவர் ஒரு மாயை. அவருடைய பிம்பம் மெல்ல, மெல்ல உடைந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு எல்லாவற்றையும் கார்ப்பரேட் போல விளம்பரம் செய்து வருகிறது‌. காங்கிரஸ் மட்டுமே இந்தியாவில் நிலையான, வலிமையான ஆட்சியைத் தர முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 கொலைகள் நடைபெறும் வரையில் மாவட்ட நிர்வாகமும், போலீஸும் என்ன செய்து கொண்டிருந்தது. ஆகவே மக்களை வாழ வைப்பதற்கான அக்கறை ஆட்சியாளர்களிடம் இல்லை. தமிழகத்தில் தொழில் தொடங்க பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி உதவிகரமாக இல்லை. அதனாலேயே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களின் ஆலை விரிவாக்கத்தை மற்ற மாநிலங்களில் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போல் உள்ளது தமிழக ஆட்சியாளர்களின் செயல். தமிழக முதல்வர் அமெரிக்காவில் பூந்தோட்டம், பூங்கா, பால் பண்ணை ஆகியவற்றையே பார்த்து வந்துள்ளார்.

மக்களை திசை திருப்ப மத்திய பாஜக ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறதோ, அதைப் பின்பற்றியே இங்குள்ள அதிமுக அரசும் செய்கிறது. நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரச்சாரத்திற்கு அழைப்போம்''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x