Published : 22 Sep 2019 11:11 AM
Last Updated : 22 Sep 2019 11:11 AM

வரும் 23, 24 தேதிகளில் சத்தியமூர்த்தி பவனிலேயே விருப்ப மனு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை

அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வருகிற செப்டம்பர் 23, திங்கள்கிழமை மற்றும் 24 செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார். இதையடுத்து, அவர் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மே மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காலியாக உள்ள நாங்குநேரிக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கே.எஸ்.அழகிரி, குமரி அனந்தன், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் விருப்ப மனு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிவிப்பில், ''
21.10.2019 அன்று நடைபெறவுள்ள நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வருகிற செப்டம்பர் 23, திங்கள்கிழமை மற்றும் 24 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 25-ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விருப்ப மனு கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.25,000/-, மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ.10,000/- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft) செலுத்தி விருப்ப மனுக்களை சத்தியமூர்த்தி பவனிலேயே சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x