Published : 22 Sep 2019 10:53 AM
Last Updated : 22 Sep 2019 10:53 AM

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு: வாசன் அறிவிப்பு 

சென்னை

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தமாகா முழு ஆதரவு அளித்து அவர்களின் வெற்றிக்கு உறுதியோடு களப்பணியாற்றும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அக்டோபர் 21-ல் நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற தமாகாவினர் களப்பணியாற்றுவார்கள். தமிழகத்தில் காலியாகவுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவின் வேட்பாளர்களை தமாகா ஆதரிக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளிலும் தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுகவினுடைய வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலே களப்பணியாற்றுவார்கள்.

இன்று தமிழக அரசு, அதனுடைய முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் விரும்பக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை கொடுத்து அதனை பெருநகரம் முதல் கிராமம் வரை சென்றடையக்கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல தமிழக முதல்வரின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணமானது தமிழகம் தொழில் துறையில் மேலும் முன்னேறவும், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி கொடுப்பதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியில் சமநிலையற்ற சூழ்நிலை நிலவினாலும் தமிழககத்தின் பொருளாதாரமும், முதலீடுகளும் சாதகமான சூழலில் இருப்பதாக பொது நிதி மற்றும் கொள்கை தேசிய நிறுவன பேராசியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல 2018 - 19 ஆம் ஆண்டின் தேசிய வளர்ச்சி விகிதமான 6.81 சதவீதத்தைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி தமிழகத்தில் 2018 - 19 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.17 சதவீதம் என பதிவாகிவுள்ளது.

எனவே, தமிழக அரசு விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாகவும், தொழில் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்பதற்காகவும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தமிழக மக்களுக்கு பெரும் பயன் தரும் என்பது வெளிப்படுகிறது. குறிப்பாக ஒட்டு மொத்த தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கின்ற அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. இதுவே நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு அடித்தளம்.

எனவே நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா முழு அதரவு அளித்து, வாக்கு சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x