Published : 22 Sep 2019 10:11 AM
Last Updated : 22 Sep 2019 10:11 AM

இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம்; நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது: கமல்ஹாசன் 

சென்னை

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும் பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021-ல் ஆட்சிப் பொறுப்பினை மக்கள் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும் ஆள்பவர்களும் போராடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது'' என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.ராதாமணி. திமுகவைச் சேர்ந்த இவர் கடந்த ஜூன் 14-ம் தேதி காலமானார்.

இதையடுத்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருப்பதாக தமிழக சட்டப் பேரவை அறிவித்தது. தேர்தல் ஆணையத் துக்கும் இது முறைப்படி தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, 2 தொகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனிடையே இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x