

ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை
தேனி மருத்துவக் கல்லூரி ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்டம் சம்பவம் வெளிவரும் முன்பாகவே, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் போலி மாணவர் சேர்க்கை சான்றிதழ் கொடுத்து ஆந்திரா, பிகாரைச் சேர்ந்த 2 மாணவர்கள் சேர முயன்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செப்.10-ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ரியாஷ் என்பவர், அவரது குடும்பத்தினருடன் எம்பிபிஎஸ் சேருவதற்காக வந்துள்ளார். அவ ரது சான்றிதழ்களை பேராசிரியர்கள் சரிபார்த்ததில் அவரிடம் ‘நீட்’ தேர்ச்சி சான்றிதழும், ‘கவுன்சிலிங்’கில் பங் கேற்ற சான்றிதழும் இல்லை. போலி மாணவர் சேர்க்கை சான்றிதழ் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கல்லூரி ‘டீன்’ வனிதா, மாணவர் ரியாஷை கையும் களவுமாக பிடித்து தல்லாக்குளம் போலீஸில் புகார் மனுவுடன் ஒப்படைத்துள்ளார். போலீஸார் அவரிடம் விசாரித்தனர். மாணவர் ரியாஸ், ‘நீட்’ தேர்வு எழுதாமலே டெல்லியில் உள்ள மோசடிக் கும்பலிடம் பணத்தைக் கொடுத்து, போலி மாணவர் சேர்க்கை தேர்ச்சி பெற்று, அதுதான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான உண் மையான சான்றிதழ் என நம்பி மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சித்ததும் தெரியவந்தது.
மாணவரை ஏமாற்றிய கும்பல் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்ப தால், தல்லாக்குளம் போலீஸார் அவரை மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் மாணவரிடம் விசாரித் தனர். அதற்கு அவர், தான் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய வில்லை, போலி சான்றை உண்மை யான சான்று என்று பணத்தை கொடுத்து ஏமாந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார், டெல்லி போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அலட்சியமாக அவரை அனுப்பி வைத்துள்ளனர். மாணவர் ரியாஸ் தப்பித்தால்போதும் என்று ஆந்திரா வுக்கு சென்றுவிட்டார்.
மற்றொரு மாணவர்
ரியாஸைபோல், அதற்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரிக்கு பிகாரைச் சேர்ந்த நிதிவர்மன் என்ற மாணவர், போலி மாணவர் சேர்க்கை சான்றிதழை கொண்டுவந்து சேர முயற்சித்ததாகவும், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தபோது அந்த மாணவர் தப்பிஓடிவிட்டார்.
தற்போது தேனி சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் மதுரை போலீஸாருக்கு, இந்த விவகாரம் நெருக்கடியை ஏற் படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘போலி மாணவர் சேர்க்கை சான்று கொண்டு வந்த மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும், அதில் தேர்ச்சிப்பெற்று கவுன்சிலிங்கில் பங்கேற்றுதான் கல்லூரியை தேர்வு செய்ய வேண் டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லை. அறியாமையால் மோசடி கும்பலிடம் லெட்டர் பேடில் போலி மாணவர் சேர்க்கை சான்று பெற்று வந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கும், ‘நீட்’ தேர்வு விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்.
டெல்லியை சேர்ந்த கும்பல்
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘டெல் லியைச் சேர்ந்த கும்பல்தான், மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர வந்த ஆந்திரா மாணவர் ரியாஸையும் ஏமாற்றி உள்ளனர். அவர்கள்தான், ரியாஸையும், மற் றொரு மாணவரையும் போலி சான்றிதழை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர அனுப்பியுள்ளனர். இதற்காக மாணவர்கள் அந்த கும்பலிடம் ரூ.8 லட்சம் பணமும் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இவர்கள் போலி மாணவர் சேர்க்கை சான்றுடன் வந்த நேரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை முடிந்துவிட்டதால் எளிதாக சிக்கிக் கொண்டனர். இந்த தகவலை டெல்லி போலீஸாருக்கு தெரிவித்தும் அவர்கள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் மாணவர் ரியாஷை கைது செய்யாமல் அனுப்பினோம். தற்போது அவர் தலைமறைவாகி இருக்கலாம்" என்றனர்.
தேனிக்கும் மதுரைக்கும் தொடர்பா?
தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ்-ல் சேர்ந்த உதித் சூர்யா விவகாரத்திலேயே போலீஸாரால் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியிலும் 2 பேர் போலி சான்றிதழ் கொடுத்து சேர முயன்ற விவகாரமும் பெரிதாகி உள்ளதால், மருத்துவக்கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முயற்சித்த, மாணவர்களை பெரிய அளவில் மோசடி கும்பல் ஏமாற்றி இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவான மாணவர்களைப் பிடித்து முழுமையாக விசாரித்தால் இந்த விவகாரத்தில் உண்மை தகவல்கள் வெளியாகும். இதற்கிடையில் போலீஸார் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர போலி சான்று வழங்கிய டெல்லி கும்பலுக்கும், தேனி கல்லூரி சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.