Published : 22 Sep 2019 08:23 AM
Last Updated : 22 Sep 2019 08:23 AM

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: கட்சியினருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தல்

சென்னை

ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்களை மக்களிடம் பாஜகவினர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங் களைச் சேர்ந்த பாஜக நிர்வாகி களுடன் கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று காணொலிக் காட்சி மூலம் இந்தியில் கலந்துரையாடினார். நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.

காணொலிக் காட்சி மூலம் இதில் பங்கேற்க, சென்னை தி.நகரில் உள்ள ‘கமலாலயம்’ பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், அரசகுமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காணொலியில் அமித் ஷா பேசியதாவது:

தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் 10 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் துறை மேம்படும். முதலீடு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு பெருகும்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். ஜிஎஸ்டியில் பல்வேறு சலுகைகள், விலக்குகள் அளிப்பட்டுள்ளது பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வங்கிக் கிளையில் இருந்தும் குறைந்தபட்சம் 5 பேருக்கு கடன் உதவி கிடைக்க பாஜக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் யாத்திரைகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

காந்தியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வரும் அக்டோபர் 2 முதல் 30-ம் தேதி வரை பேரணிகள் நடத்த பாஜக தமைமை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அக்டோபர் 2-ம் தேதி நடக்கும் பேரணியை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, அதில் பங்கேற்கிறார். இதேபோல, நாட்டின் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்.

இதில், கட்சி பேதமின்றி சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்று, காந்தியின் கொள்கைகளை இளைஞர்களிடம் எடுத்துரைப்பார்கள். தூய்மை திட்டங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மற்றும் தமிழக பாஜக தலைவர் நியமனம் குறித்து கட்சித் தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x