

பறக்கும் ரயில், மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களை இணைக்கும் பிரமாண்ட மையத்தை பரங்கிமலையில் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
மெட்ரோ ரயில், கடற்கரை வேளச்சேரி வழியாக வரும் பறக்கும் ரயில் மற்றும் கடற்கரை - தாம்பரம் புறநகர் மின்சார ரயிலின் சந்திப்பு என 3 வகையான ரயில் திட்டங்களை இணைக்கும் முக்கிய மையமாக பரங்கிமலை ரயில் நிலையம் மாறி வருகிறது. இதில், பறக்கும் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை ஒரே இடத்தில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூரை அடுத்து முக்கிய ரயில் நிலையமாக பரங்கிமலை மாறியுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக வரும் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில்களை இணைக்கும் முக்கிய மையமாக பரங்கிமலை உள்ளது. இங்கு மக்கள் அதிகமாக வருவார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் தளத்தில் பறக்கும் ரயில் நிலையமும், 2-வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் அமைகிறது. ஒவ்வொரு தளமும் 7,500 சதுர மீட்டர் பரபரப்பளவு கொண்டதாகும்.
இதன் அடிப்படை கட்டுமானப் பணிகளில் 75 சதவீதம் முடிந்து விட்டன. ரயில் பாதைகள் அமைக்கும் பணியும் பெரும் பாலும் முடிந்துவிட்டன. தொழில் நுட்பப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம். டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள் ளோம்.
மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களைக் காட்டிலும், இந்த ரயில் நிலையத்தில் 2 மடங்கு வசதிகள் செய்யப்படும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையத்துக்கு செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கீ்ழ் பகுதிகளில் மாநகர பேருந்துகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் மேம்படுத்தப் படும்” என்றனர்.