Published : 21 Sep 2019 05:07 PM
Last Updated : 21 Sep 2019 05:07 PM

புதிய வாகனங்கள் குறித்த தமிழக அரசு ஆணைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கோப்புப் படம்

சென்னை

தமிழகத்தில் புதிய வாகன மாடல்களை விற்பனை செய்யும் முன், போக்குவரத்து ஆணையரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சாலைகள் புதிய மாடல் வாகனங்களை (இருசக்கரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள்) உற்பத்தி செய்யும்போது, மத்திய மோட்டார் வாகனச் சட்டப்படி, அந்த வாகனத்தின் மாதிரியை ஆய்வு செய்து தேசிய சோதனை முகமை அனுமதி வழங்குகிறது.

அதன்பின், அந்த வாகனங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் 'வாகன் நிக்' என்ற மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் வாகனங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் புதிய மாடல் வாகனங்களை விற்பனை செய்ய போக்குவரத்து ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து கடந்த மே 9-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் சகர்ஸ்தமானி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “தமிழக அரசின் இந்த அரசாணையால் புதிய மாடல் வாகனங்களைப் பதிவு செய்ய 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மத்திய வாகனச் சட்டத்தின்கீழ் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் தமிழகத்தில் மட்டும் கூடுதலாக தேவையற்ற ஒரு நடைமுறையை அரசு கொண்டு வந்திருப்பது விதிகளுக்கு முரணானது. தமிழக அரசின் இந்தப் புதிய அரசாணையால் வாகன உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் எனவும், இது லஞ்ச லாவண்யத்தையும் அதிகரித்துவிடும் ” எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனுவுக்கு அக்டோபர் 17-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x