

மதுரை
மதுரை மாநகரப் பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும், இதுவரை 4ஜி சிம்கார்டு பெறாத வாடிக்கையாளர்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ஜி சேவையை துவக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் இச்சேவையை ஒவ்வொரு நகரமாக விரிவுபடுத்தி வருகிறது. தற்போது சென்னை, கோவை, சேலம், திருச்சி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே 4ஜி சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வந்தபோதும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்னும் தங்களது 3ஜி சிம்கார்டுகளை 4ஜி ஆக மாற்றிக் கொள்ளாததால் இச்சேவையை துவக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
மதுரை நகரில் பிஎஸ்என்எல் செல்போன் சேவையைப் பயன்டுத்திவரும் 60,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களில் இருபத்தி இரண்டாயிரம் பேர் மட்டுமே இதுவரை 4ஜி சிம்கார்டுகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த 4ஜி சிம்கார்டு பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே பிஎஸ்என்எல்லின் 4ஜி டேட்டா சேவையைப் பெறமுடியும் என்பதால் இன்னும் 3ஜி சிம்கார்டுகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் உடனடியாக 4ஜி சிம்கார்டுகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ராஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "4ஜி சேவை விரைவில் மதுரை நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட உள்ளதால், 4ஜி மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகி தங்களது 3ஜி சிம்கார்டுகளை 4ஜி சிம்கார்டுகளாக இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.
இதற்காக தல்லாகுளம், கீழமாசிவீதி, எல்லீஸ்நகர் ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் (22.9.2019) திறந்திருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று, அடையாள அட்டைகளைக் காண்பித்து புதிய 4ஜி சிம்கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.