Published : 21 Sep 2019 02:39 PM
Last Updated : 21 Sep 2019 02:39 PM

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி; நாளை மறுநாள் விருப்ப மனு; ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியிலுள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (செப்.21) அறிவித்தது.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியிலுள்ள காமராஜ் நகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தோம்.

அதனடிப்படையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்படும். விருப்ப மனு பெறப்பட்டு அடுத்த நாளே வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி, பிரச்சாரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்," என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையே, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், செப்.23, திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள், ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வேட்பாளர் நேர்காணல், செப்.24, செவ்வாய்க்கிழமை, அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும்," என அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x