

சென்னை
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.
தமிழகத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் வென்றது. அதன் உறுப்பினர் வசந்தகுமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்பியாக உள்ளார். அவர் எம்பியாக தேர்வானதால் அவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை ஒட்டி அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதியை மத்திய தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும். இந்த தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வரும் 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். தொடர்ச்சியாக 96-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு நிற்கிறது. கடந்தமுறை திமுக கூட்டணியில் வசந்தகுமார் வெற்றி பெற்றார்.
இம்முறை வசந்தகுமார் ராஜினாமா செய்த பின்னர் நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடும் என இரண்டாங்கட்ட தலைவர்கள் கூறிவந்தனர். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் திருச்சி எம்பி திருநாவுக்கரசரை அமரவைத்துக்கொண்டே நாங்குநேரி தொகுதியில் திமுக நின்றால் எளிதாக வெற்றிபெறும் என்று பேசினார்.
நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடம், எனவே கூட்டணி தர்மப்படி காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும், காங்கிரஸ் இம்முறை விட்டுகொடுத்துவிட்டால் இனி நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு கிடைக்காது என்பது காங்கிரஸில் உள்ளவர்கள் வாதம். இதன் காரணமாக காங்கிரஸ் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதியை கேட்டுப்பெறுவது என்கிற முடிவுடன் சற்றுமுன் அறிவாலயம் வந்தனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி ஆனந்தன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் அறிவாலயம் வந்தனர்.
நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமாரின் அண்ணனும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி ஆனந்தனை நிறுத்தினால் அவர் எளிதாக வெற்றிபெறுவார் என கருதுகின்றனர். அதே கருத்துடன் ஸ்டாலினை அணுகியுள்ளனர். சந்திப்பு முடிந்தப்பின்னர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரி காமராஜர் சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வெற்றிக்காக கூட்டணி கட்சித்தலைவர் அயராது பாடுபட தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.