சுபஸ்ரீ மரணம்: ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல் துறை காப்பாற்றுவது யாருக்காக? - ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

பேனர் விபத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில் இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, சென்னை கோவிலம்பாக்கத்தில், அதிமுக பிரமுகர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்து விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். பேனரால் ஏற்பட்ட இந்த விபத்துக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சுபஸ்ரீயின் இல்லத்துக்குச் சென்று, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். திமுக சார்பாக, ரூ.5 லட்சம் நிதியுதவியும் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், விபத்துக்குக் காரணமாக இருந்த பேனர்களை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தும் இன்னும் கைது செய்யவில்லை. இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலின், குற்றவாளியைக் கைது செய்யாமல் இருப்பது சட்ட விரோதம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (செப்.21) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்! காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் சென்னை காவல் துறை காப்பாற்றுவது யாருக்காக?," எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in