Published : 21 Sep 2019 12:56 PM
Last Updated : 21 Sep 2019 12:56 PM

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவது சாத்தியமே இல்லை: டி.ராஜா

மதுரை

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவது சாத்தியமே இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா, "டெல்லியில் நேற்றைய தினம் இடதுசாரிகள் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து கண்டன இயக்கமாக அக்டோபர் 10 முதல் 16 வரையில் நாடுதழுவி போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரதமர் மோடி, உழைக்கும் மக்கள் பற்றி கவலைப்படுவதில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார்.

நேற்றைக்குகூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவாக வரியை குறைத்துள்ளனர். இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் ஆனந்தக் கூத்தாடி வருகின்றனர்.

இந்தியாவின் அடிப்படைகள் மோடி அரசால் தகர்க்கபடுகிறது. இந்தியாவில் உள்ள இயற்கை வளங்கள் எல்லாம் அந்நியர்கள் கொள்ளையடிப்பதற்காக திறந்து விடப்படுகிறது.

இன்றைக்கு நிலக்கரி சுரங்கத்தில் 100% அந்நிய முதலீட்டை கொண்டு வருகின்றனர் அதனைப் போன்றே பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீட்டை கொண்டு வருகிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார நெருக்கடிக்கு மிகப்பெரிய காரணம். குறிப்பாக மதுரை, திருப்பூர் சுற்றுவட்டார சிறு குறு வணிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை மறைப்பதற்கு, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து 370 ரத்து, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு என அடக்குமுறையைக் கொண்டுவந்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி குறித்து பேசியது தமிழ்நாட்டு மட்டுமின்றி பல்வேறு மாநிலகளிலும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது அவ்வாறு கூறவில்லை என்று கூறியுள்ளார்.

பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம். ஒரே கலாச்சாரம், ஒரே மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவது சாத்தியமே இல்லை.
அப்படியொரு முடிவு எடுத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதோடு அந்த முயற்சியை முறியடிக்கும்.

கீழடி அகழாய்வுப் பணிகள் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்று வருகிறது . தமிழ் மொழி , கலாச்சாரம், நாகரிகம் பற்றிய தமிழ் மொழியின் தொன்மை, பண்டைய நாகரிகம் பற்றிய ஆய்வுத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே கீழடி அகழாய்வுப் பணிகள் மற்றும் வெளியீடுகள் தொடரவேண்டும்" என்றார்.

-எஸ்.ஸ்ரீநிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x