Published : 21 Sep 2019 12:56 PM
Last Updated : 21 Sep 2019 12:56 PM

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

மேலும் மகாராஷ்டிரா மற்றும் ஹரி யாணா சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்ட மாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடை பெறும் என்றும் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திரு நெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதுபோல 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.ராதாமணி. திமுகவைச் சேர்ந்த இவர் கடந்த ஜூன் 14-ம் தேதி காலமானார்.

இதையடுத்து, நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதி களும் காலியாக இருப்பதாக தமிழக சட்டப் பேரவை அறிவித்தது. தேர்தல் ஆணையத் துக்கும் இது முறைப்படி தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, 2 தொகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேதியை, தலைமை தேர் தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று அறிவித்தார். இந்தத் தேர்தலுடன் சேர்த்து, பிஹாரில் காலியாக உள்ள ஒரு மக்களவை தொகுதி (சமஸ்டிபூர்) மற்றும் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அறிவித்தார்.

இதன்படி, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 23-ம் தேதி (நாளை) வெளியிடப்படுகிறது. நாளையே வேட்புமனு தாக்கல் தொடங்கு கிறது. மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30-ம் தேதி. மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி நடக்கும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு அக்டோபர் 21-ம் தேதி நடத்தப்படும். அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அக்டோபர் 27-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிகள் அமைந்துள்ள திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங் களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

நாங்குநேரி தொகுதி கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தேர்தலை சந்திக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் 6 முறை, அதிமுக 5 முறை, திமுக 2 முறை, ஜனதா கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதி கடந்த 2011-ல் முதல் தேர்தலை சந்தித்தது. அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அப்போது 2-ம் இடம் பிடித்த திமுகவின் கு.ராதாமணி, கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்றார்.தேர்தல் முடிவுகள் அக்.24-ம் தேதி வெளியாகும்

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 4 கடைசி நாள். 5-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்பப் பெற 7-ம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.

தேர்தல் அட்டவணை வெளியிட்டது முதலே, 2 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மகாராஷ்டிராவில் 8.95 கோடி பேரும், ஹரியாணாவில் 1.83 கோடி பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டு மாநில தேர்தலிலும் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.28 லட்சமாக இருக்கும். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக, மாவோயிஸ்ட் தீவிரவாத பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவின் கட்சிரோலி, கோண்டியா பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மக்களவைத் தேர்தலைப் போலவே அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களுடனும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட் கருவிகள் பொருத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 5 இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகள் உள்ளன. அங்கு பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறகிறது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். ஹரியாணாவில் 90 தொகுதிகள் உள்ளன. அங்கு மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிர பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 9-ம் தேதியும் ஹரியாணா பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 2-ம் தேதியும் முடிவடைய உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x