

தேனி
சென்னை மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகார் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனுக்கு கண்டமனூர் விலக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டீன் ராஜேந்திரன், "நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் குறித்து எனக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் வந்தது.
அந்த புகாரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் வேறு, கல்லூரியில் சேர்ந்த மாணவர் வேறு என்று கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கண்டமனூர் விலக்கு போலீசிஸில் புகார் தெரிவிக்கப்பட்டதோடு, மாநில சுகாதாரத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், க.விலக்கு போலீஸார் இன்று (சனிக்கிழமை) டீன் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், 1.மாணவர் ஆள்மாறாட்டம் செய்த புகார் எப்போது, யாரிடமிருந்து வந்தது? 2. மாணவரிடம் விசாரணை நடத்திய குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர்கள் யார் யார்? 3. தேனி மருத்துவக் கல்லூரியில் எங்கெல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது? அவை என்ன நிலையில் இருக்கின்றன? என மூன்று கேள்விகளை முன்வைத்து அதற்கு விளக்கம் கோரியுள்ளனர்.
இதற்கிடையில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் சென்னை போலீஸார் தேடி வருகின்றனர்.