

தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட 105 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உட்பட 409 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கும் என மாநில தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் 105 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு சங்கம் உட்பட 111 சங்கங்களில் 1.201 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இவர்களில் இருந்து 111 தலைவர் மற்றும் 111 துணைத் தலைவர்களை தேர்வு செய்ய, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதியும், வாக்குப்பதிவு 27-ம் தேதியும் நடக்கிறது. தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட்1-ம் தேதி நடக்கும்.
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 1,201 பேரில் 216 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும், 328 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர 298 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள 400 உறுப்பினர்கள் மற்றும் 67 தலைவர், 52 துணைத் தலைவர் காலியிடங்களுக்கான தேர்தல்களும் நடக்கிறது.
தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கன தேர்தல் அறிவிப்பு 28-ம் தேதி தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தேர்தல் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை வாக்குப்பதிவு நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.