Published : 21 Sep 2019 11:19 AM
Last Updated : 21 Sep 2019 11:19 AM

தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்; வைகைக் கரை வரலாறு பதியட்டும்: வைகோ

சென்னை

கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட விரிவான ஆய்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (செப்.21) வெளியிட்ட அறிக்கையில், "வைகைக் கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களைச் சேகரித்து பழம் பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சிதான் கீழடி ஆய்வு. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்தே வருகின்றது. அதற்காகத் தமிழகம் போராட வேண்டியதிருக்கின்றது. உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை.

கீழடி ஆய்வுகள் குறித்து மார்ச் 2017 அன்று அமைச்சர் மகேஷ் சர்மாவைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தேன். பள்ளிப் பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாகக் கற்பித்து வருகின்றார்கள். நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாற்றை, சேர, சோழ பாண்டியர்களைப் புறக்கணித்து வருகின்றார்கள். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது.

காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப்படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி எழுத வேண்டும். உதயச்சந்திரன் ஐஏஎஸ் தொல்லியல் துறைக்குப் பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்டு வருகின்ற பணிகளையும், கீழடி ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக இயங்கி வருகின்ற சு.வெங்கடேசனையும் பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்காக மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது. கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட விரிவான ஆய்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x