யாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை கேட்டு மக்கள் தீர்மானிப்பதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

யாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை கேட்டு மக்கள் தீர்மானிப்பதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Updated on
1 min read

கோவில்பட்டி

"நடிகர் விஜய்யை கேட்டுதான் யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பதில்லை" என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (சனிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நடிகரின் விஜய் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஒரு திரைப்பட நடிகராக தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகின்றனர். விஜயும் அப்படித்தான் பேசியிருக்கிறார். அவர் யாருடைய பேச்சைக் கேட்டு பேசினார் எனத் தெரியவில்லை. அவரது பல படங்கள் வெளியாக அரசு நல்ல உதவி செய்துள்ளது.

மெர்சல் படத்துக்காக எங்களிடம் வந்தார். நாங்கள் முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசவில்லை என்றால் கடந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியே வந்திருக்காது. இப்படி நாங்கள் வித்தியாசமோ வேறுபாடோ பார்க்கவில்லை. ஆனால் பரபரப்புக்காக அந்தப்படம் ஓடுவதற்காக தன்னையும் அறியாமல் அந்தக் கருத்தை கூறியிருப்பார்.

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அதை சரியாகவே வைத்திருக்கிறார்கள். விஜய்யை போன்றவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்யத் தேவையில்லை. அந்தளவுக்கு தன்னைத்தானே விஜய் நினைத்துக்கொண்டால் அது அவருடைய அறியாமை என்று தான் சொல்வேன்" என்றார்.

அப்படியென்றால் கமலும் அரைவேக்காடா?

அரசியல்வாதிகள் பற்றி நடிகர் கமல்ஹாசானின் கருத்து குறித்த கேள்விக்கு, "அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் கமலஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார்.

அவர் தன்னைத்தானே அரைவேக்காடு என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறை சொல்கிறார் என்றுதான் அர்த்தம்" என்றார்.

-எஸ்.கோமதிவிநாயகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in