Published : 21 Sep 2019 10:43 AM
Last Updated : 21 Sep 2019 10:43 AM

பின்னலாடை துறைக்கு கைகொடுக்குமா மத்திய அரசின் சலுகை நீட்டிப்பு?

பெ.ஸ்ரீனிவாசன்

நெருக்கடியில் உள்ள பின்னலாடை துறைக்கு, மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சலுகை நீட்டிப்பு மற்றும் புதிய சலுகை திட்ட அறிவிப்புகள் ஊக்கமளித்துள்ளன. தொடர்ந்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பின்னலாடைத் துறை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் என்கின்றனர் தொழில் துறையினர்.

ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம், ஏற்றுமதி, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என பரந்து விரிந்துள்ள பின்னலாடைத் துறை அண்மைக்காலமாக மந்தநிலையில் உள்ளது. இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பு தொழில் துறையினருக்கு கை கொடுக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் டி.ஆர்.விஜயகுமாரிடம் பேசினோம்.“கடந்த மாதத்துடன் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட `டிராபேக்’ சலுகையும், ஆர்.ஓ.எஸ்.எல். சலுகையும் இவ்வாண்டு இறுதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் வேறு பெயரில் ஒருங்கிணைத்து, இந்த சலுகைகள் வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன்களை விரைவாக வழங்க அறிவுறுத்தல், கைத்தறி, சுற்றுலா, ஜவுளி, தோல் துறைகளில் வர்த்தகத் திருவிழாக்கள் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. சலுகைகள் தொடர்வதால், சர்வதேச போட்டியை சமாளித்து, நம்பிக்கையுடன் ஆர்டரை எடுக்க முடியும்” என்றார்.

திருப்பூர் இளம் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் குமார் துரைசாமி கூறும்போது, “ஆயத்த ஆடை துறையில் ஏற்றுமதியைவிட, உள்நாட்டு வர்த்தகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார சூழல் மேம்பட, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவை ஊக்குவிக்கவும் முன்வர வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் உதவ வேண்டும். சரியான முறையில் வர்த்தகம் செய்வோருக்கு உரிய நிதியுதவி அளிக்க வேண்டும். மேலும், நிதிநிலை மதிப்பீட்டிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். செயல்படா சொத்துக்கான (என்பிஏ) வரையறையை 180 நாட்களாக உயர்த்த வேண்டும். மரபு சாரா மின் உற்பத்திக்கு பெருமளவு மானியம் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். தொழிற்சாலைகள் விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவ உதவ வேண்டும். வெளிநாட்டு ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்நிறுவனங்களுக்கு உதவ வேண்டும். திருப்பூரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். ஜவுளித் துறையை மேம்படுத்த கூடுதல் திட்டங்கள், சலுகைகளை அறிவிப்பது மிகவும் முக்கியமானதாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x