

இப்போதெல்லாம் இணையதளம் இல்லாமல் எதுவுமே செய்யமுடியாது என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அத்தனை துறைகளிலும் இணையதளத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. “ஆயுதங்களைக் கொண்டு போர் நடந்ததெல்லாம் அந்தக்காலம். இனி, இணையவழி தாக்குதல்தான் உண்மையான போராக இருக்கும்” என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள். எனில், இணையதளத்தை பாதுகாப்பாக கையாள வேண்டியது மிக அவசியமாகிறது.
பல்வேறு துறைகளிலும் இணையவழி தாக்குதலைப் பொறுத்தவரை, மிகவும் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. கே-7 கம்ப்யூட்டிங் இணையஆபத்து கண்காணிப்பு அறிக்கையின்படி, கோவை உள்ளிட்ட நகரங்கள் இணைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கே-7 கம்ப்யூட்டிங் நிறுவனம் மற்றும் கே-7 அகாடமி சார்பில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கோவையில் நடைபெற்றது. இதில், கோவை மாநகர காவல் துறை உதவி ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு) சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இணைய வழி தாக்குதல், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், “இந்தியா போன்ற இணைய குற்றங்கள் நிறைந்த நாட்டில், இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்” என்றார்.
கே-7 கம்ப்யூட்டிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி புருஷோத்தமன் பேசும்போது, “நாட்டில் இரண்டாம் கட்ட நகரங்களில் அதிக அளவிலான பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மிகவும்
குறைவாகவே உள்ளது.
மாணவர்களிடமிருந்து விழிப்புணர்வை தொடங்க வேண்டும். எனவே, மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆய்வகங்களை அமைத்து பயிற்சி அளித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார். இந்த முகாமில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.