

சென்னை
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. புதிய (பொறுப்பு) தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினித் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமானி நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி அன்று தஹில் ரமானி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.என் பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன் அடங்கிய கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்தது.
தனது மாறுதலைப் பரிசீலிக்க வேண்டும் என கடந்த 3-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி கொலிஜியத்திடம் வேண்டுகோள் வைத்தார். ஆனால் கடந்த செப்.4-ம் தேதி அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என கொலிஜியம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து மீண்டும் இடமாறுதலைப் பரிந்துரைத்தது.
அதேபோன்று மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை (60) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்தது. தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டல் கடந்த மே மாதம் 28-ம் தேதி முதல் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இதனிடையே தனது கோரிக்கையை ஏற்காததால் தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தலைமை நீதிபதி அமர்வில் தஹில் ரமானி பங்கேற்காமல் தள்ளிவைத்தார். உயர் நீதிமன்றத்திற்கு அவர் வராததால் தலைமை நீதிபதியின் அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளில் முக்கியமான வழக்குகள் மூத்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியதாக பின்னர் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. தலைமை நீதிபதி ராஜினாமாவை ஏற்காத நிலையில் அவர் தொடர்ச்சியாக தலைமை நீதிபதியாக நீடித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக அஜய் குமார் மிட்டல் பொறுப்பை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் பல வழக்குகள் தேக்கம் அடைந்தன. இந்நிலையில் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுள்ளார்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது ராஜினாமாவை கடந்த 6-ம் தேதி சமர்ப்பித்தார் அதைப் பரிசீலித்து அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சகத்தின் மற்றொரு அறிவிப்பில் சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினித் கோத்தாரியை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வந்த தேக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்கப்பட்டதன் மூலம் புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக வினித் கோத்தாரி செயல்படுவார் எனத் தெரிகிறது.
தலைமை நீதிபதி பொறுப்பு வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வு, தற்போது 2வது நீதிமன்ற அறையில் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வருகிறது. வினித் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்புகளை கவனிக்க தொடங்கியவுடன், அவர் தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதி நீதிமன்ற அறையில் அமர்ந்து தலைமை நீதிபதி அமர்வு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும்.