Published : 20 Sep 2019 06:04 PM
Last Updated : 20 Sep 2019 06:04 PM

பேனருக்கு பதில் விதைப் பந்துகள்: 'காப்பான்' வெளியீட்டில் சூர்யா ரசிகர்கள் அசத்தல்

விழுப்புரம்

'காப்பான்' பட வெளியீட்டில், பேனர் வைப்பதற்கு பதிலாக சூர்யா ரசிகர்கள் விதைப் பந்துகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினர்.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து, தண்ணீர் லாரி ஏறியதில், படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவானது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்தனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக 'காப்பான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா "ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இங்கு ஒரு படம் வெளியாகும் போது அதற்கான கொண்டாட்டாம் என கட்-அவுட், பேனர்கள் என வைப்பீர்கள். நமது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதற்கு ஏற்றவாறு நமது புரிதலும் இருக்க வேண்டும்.

நமக்கும் மனமாற்றம் வேண்டும். இனி எங்குமே கட்-அவுட், பேனர் வைத்து கொண்டாட்டம் கூடாது. என்னை கட்-அவுட், பேனர் வைத்துதான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் என நடத்துவதே போதுமானது. அது என் பார்வைக்கு வருகிறது" என்று பேசியிருந்தார்.

இதற்கிடையில் சூர்யாவின் 'காப்பான்' படம் இன்று வெளியானது. இந்நிலையில் சூர்யாவின் அறிவுறுத்தலை ஏற்ற விழுப்புரம் ரசிகர்கள் பேனர்கள் எதையும் வைத்துக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாக திரையரங்கத்திலேயே விதைப்பந்துகளையும் மரக்கன்றுகளையும் வழங்கி அசத்தினர்.

விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் உள்ள திரையரங்கம் ஒன்றில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கே விதைப்பந்து இயக்கத்துடன் கைகோத்த சூர்யா ரசிகர்கள், 1,000 விதைப்பந்துகளையும் 500 மரக்கன்றுகளையும் படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் பேசும்போது, ''மரக்கன்று மற்றும் விதைப்பந்துகளை நாங்கள் தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று சூர்யா ரசிகர்கள் வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்களின் வேண்டுகோள்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x